மருத்துவமனைகளில் பொதுவாக பிணவறை இருக்கும்… ஆனால் இங்கு மருத்துவமனையே பிணவறையாகிக்கொண்டிருப்பது தான் அமெரிக்காவின் தற்போதைய நிலை என்று கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் டெட்ராயிடு நகர் மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும், சேர், டேபிள் என அனைத்து இடங்களிலும் சடலங்களாக காட்சியளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் கொடூர நிலைக்குச் சென்றுள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே சடலங்கள் காணப்பட்டு வருகின்றது. சவப்பெட்டிகள் கிடைக்காமலும், கிடைத்த சடலங்களை எரிக்க முடியாமலும் திணறி வருகின்றனர்.
தற்போது சடலங்களை வைப்பதற்கு இடமில்லாமல் ஊழியர்களின் ஓய்வறைகளிலும் குவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை கலரில் ஒரு பிளாஸ்டிக் கவரில் ஒவ்வொரு சடலமும் சுற்றப்பட்டுள்ளது. மளிகை கடையில் பொருட்களை அடுக்கி வைப்பது போன்று ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.அதுமட்டுமல்லாமல், அறைகளில் இருக்கும் சேர்கள், படுக்கைகள், பெஞ்ச்களிலும் வெறும் சடலங்களாகவே உள்ளன.

தனித்தனி அறைகளில் சடலங்களை குவித்திருந்தாலும், அதனை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.ஏற்கெனவே இருக்கும் சடலங்களை அகற்றமுடியாத நிலையில் அன்றைய தினங்களில் விழுந்து கொண்டிருக்கும் பிணங்களை எங்கே கொண்டு போய் போடுவது என்று தெரியாமல் விழிக்கின்றனர்.